அழையா ஒர் அழைப்பு

நேற்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது பேசி ரொம்ப நாள் ஆன ஒரு நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து பேசினேன். நாங்க அடிக்கடி பேச மாட்டோம், அதே சமயம் என்றோ ஒரு தடவை பேசும்போது எப்படியும் 60 நிமிடங்களுக்கு குறைவாக முடிக்க மாட்டோம். 

100 நிமிடங்கள் வரை போன தொலைபேசி அழைப்புகளெல்லாம் கூட உண்டு, ஆனால் நேற்று எவன் கண்ணு பட்டது என தெரியவில்லை, பத்து நிமிடத்தில் முடித்துவிட்டோம். அதற்கடுத்து வெறுமென சாலையை வெறிச்சு பார்த்து 1 மணி நேரத்தில் இறங்கும் இடம் வந்தது. 

அவனுடன் பேசியதை அசைபோட்டுக்கொண்டே இறங்கி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன், அப்போது ஒரு யோசனை, நமது குடும்ப நபர்கள் தவிர்த்து, அலுவலக அழைப்பு தவிர்த்து அல்லது ஏதோ ஒரு சேவை நிறுவனத்தில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்த்து நமக்கு எத்தனை அழைப்பு வெறும் நல விசாரிப்பாக வருகிறது? என்பதுதான். சொந்த மண்ணில் இருக்கும் போது இது மாதிரி அழைப்புகள் வந்திருக்கலாம், இங்கு வெளிநாட்டில் இருப்பதனாலோ என்னவோ, சற்று ஆழமாக சிந்திக்க வைத்துவிட்டது.

ஏன், நான் அழைத்த அந்த நண்பனே என்னை அழைத்து பேசினால் அபூர்வம்தான். இங்கு இருக்கும் ஒரு முகப்புத்தக நண்பர் சமயம் கிடைக்கும் போது அழைப்பார், பின்னர் நானும் அழைத்ததுண்டு, இப்போது அவரும் முன்போல் அழைப்பதில்லை. சரி நீ அப்படி எத்தனை நபர்களை, எத்தனை முறை அழைத்திருக்கிறாய் என என்னை பார்த்து கேட்கலாம். அதிக அழைப்புகள் இல்லை என்றாலும் சிலசமயம் அழைப்பதுண்டு. 

சிலசமயம் அப்படி அழைப்பு வரும், வந்த பின்தான் தெரியும் ஏதாவது தகவல் தெரிந்துகொள்ள வேண்டி வந்த அழைப்பு என்று. மேற்சொன்ன அழைப்பு வகைகள் தவிர்த்து எந்த ஒரு எதிர்பார்ப்போ, கட்டளையோ, வேண்டுகோளோ இல்லாமல் வெறுமனே "சும்மா பேசி ரொம்ப நாள் ஆச்சே" னு வர அழைப்பு ஒன்று இருந்தாலும் அதை கிடைக்கப்பெற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் தான்.

இப்படி மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்த போது ஒமனிலிருந்து ஒரு அழைப்பு Dhaya Nidhi Asokan தம்பியிடமிருந்து,
அழைப்பை அரவணைத்து பேசி முடித்து அணைத்த போது அகமகிழ்ந்தேன் ஆசிர்வதிக்கப்பட்டவனாய்....

உன்னையும் ஒரு நாள் ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணரவைப்பேன் என்ற நம்பிக்கையுடன் 

ர.

#raghuuu #unexpectedphonecalls 

Comments

Post a Comment